Home Blog

கணக்கிலடங்கா என் கல்லூரி நினைவுகள்…

Freeyavidu - Tamil Kavithai Corner

ஒவ்வொரு நாளும் நான் கல்லூரி நுழைவுவாயிலைக் கடக்கும் போதும்
ஒரு புதிய பாடத்தைக் கற்றுத்தர அவள் தவறுவதில்லை…

திகட்டாத தித்திப்பாய் தினம் ஒன்றை எனக்குள்
புகட்டி வாழ்க்கை வழிகாட்டியாய் மாறிவிட்டாள்…

கல்லூரியில் நுழைவதற்கு முன் வெற்றுக் காதிதமாய் இருந்த என்னை
சிற்பமாய் செதுக்கி அடையாளம் காட்டியவள்…

யாரோவாக இருந்த என்னை
தமிழாக எனக்கே அடையாளம் காட்டியவள்…

தோல்வியில் தளராத மனதையும்
வெற்றியில் தலைக்கணமற்ற தன்மையையும் சொல்லித்தந்தவள்…

என் பல வருட பள்ளி கற்றுத்தராத தத்துவங்களை
சில வருடத்தில் பதிய வைத்துவிட்டாள்..

விடுமுறை நாட்களைக் கூட வெறுக்கும் அளவு
இன்பமான கல்லூரி நாட்கள் தந்தவள்…

பல சிறப்புகள் சொன்னாலும்
அவள் பாடத்திலோர் பிழை…

வாழ்க்கையில் துன்பத்தின் பின்பே இன்பம்…

அவள் பாடத்தில் மட்டும் இன்பத்தை முதலில் வைத்து
மகிழ்ச்சியாய் வாழ சொல்லிக்கொடுத்து…

பிறகு துன்பத்தை வைத்து
துயரத்தில் போராட சொல்லித் தருகிறாள்…

என்றும் இனிமையான கல்லூரி நினைவுகளுடன்…

அய்யோ கிணற காணோம் !!!!!

Freeyavidu - 2G Scam

நம்பவே முடியலை..

இன்னமும் கூட.. ஆமாங்க ஆமா..

நாம் கேள்வி படுவது உண்மையே.. 2 ஜி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் 3 நிறுவனங்களும் விடுதலை.. வழக்கு தொடர்ந்தது சி. பி. ஐ தான். சரியான முகாந்திரம் இல்லாமல் வழக்கு யாராலும் தொடுக்க முடியாது அல்லவா!! அதுவும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்து கொண்டிருந்தது. மாநிலத்தில் திமுகவும் காங்கிரசும் கூட்டணியில் இருந்தன.

இன்று டெல்லி நீதிமன்றம் குற்றம் சந்தேகத்திற்கு இடமில்லாமல்
நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்துள்ளது. ஆனால் இதே வழக்கில் கனிமொழி, ராசா ஆகியோர் தண்டனை பெற்று திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றும் இதே வழக்குதான். இதே ஆதாரங்கள்தான். ஆனால் தீர்ப்பு மட்டும் வேறு!!!!!!!!

மற்ற வழக்குகளைப் போல் இதை ஒரு சாதாரண வழக்காக எண்ணக் கூடாது. 2014 ல் மத்தியில் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது இவ்வழக்கே… ஊழல் ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி…. இதை ஒரு துருப்புச் சீட்டாக வைத்தே தேர்தல் பிரச்சாரங்கள் முன் வைக்கப்பட்டன. மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் அதுவும் திமுக எதிர் கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத அளவுக்கு பரிதாப நிலைமைக்குச் சென்றது.

ஊழல் நடந்தது உண்மை. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது உண்மை. ஆனால் தண்டனை மட்டும் வழங்கப்பட வில்லை..இதில் அதிக லாபம் பெற்றது யாரோ ????

போதிய ஆதாரங்கள் இல்லை என்றால் ஆரம்ப நிலையிலேயே வழக்கைத் தள்ளுபடி செய்து இருக்கலாமே. எதற்காக வழக்கை 7 வருடங்கள் நடத்த வேண்டும்? எதற்காக உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் வழக்கு நடத்தப்பட்டது.?

எது எப்படி இருந்தாலும் சுப்பிரமணியசுவாமி இதை விடுவதாக இல்லை. மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்.

பின் குறிப்பு – சுப்பிரமணியசுவாமி தொடர்ந்த அனைத்து வழக்குகளிலும் கீழ் நீதிமன்றங்களில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டும், மேல் முறையீடு செய்யப்பட்டு குற்றவாளிகள் தண்டனை பெற்றும் இருக்கிறார்கள்…

நினைவுகளால் ஒரு கடிதம் !!!

Freeyavidu - Kavithai Corner

சிலரைப் பார்க்கையில் சந்தோஷமாக இருக்கும்..
சிலரிடம் பேசினால் உற்சாகமாக இருக்கும்…
ஆனால் உன் பெயரைக் கேட்டால் கூட உள்ளுக்குள் மின்னலடிக்கிறது..
உன்னை நான் காதலிக்கிறேனா எனத் தெரியவில்லை…
ஆனால் உன்னுடன் இருக்க அதிகம் ஆசைகொள்கிறேன்..
நிஜத்தில் நிலவை விடத் தொலைவில் வசிப்பவளுக்கு…
நினைவுகளால் ஒரு கடிதம்…

என் அருகில் நீ இருந்தால் !!!

Freeyavidu - Tamil Kavithaigal

என் அருகில் நீ இருந்தால்…
எக்கச்சக்கமாய் ஏதேதோ தோன்றுமடி..
ஏழடி தூரம் தள்ளி நிற்க நினைத்தாலும்..
ஏனோ உன் விழி பார்க்கையில் எல்லாம்…
எப்படியோ அதில் மாட்டிக் கொண்டு தவிக்கிறேன்…
எப்படி தப்பிச் செல்வது எனத்தெரியாமல்…
எத்தனையோ நாட்களாய் என் முயற்சியில் தோற்கிறேன்…
என்னதான் தோற்றாலும் ஏனோ ஓயாமல் தொடர்கிறேன் உன்னை…
ஏனென்றால் இது எனக்கு மாறாத கிறுகிறுப்பைத் தருகிறது…
எப்படி சொல்வது நான் என் காதலை உன்னிடம்…

90 களில் பிறந்த குழந்தைகளுக்கு பின் காண முடியவில்லையே ஏன்?

FreeyaVidu - boy-child-fun-beach

குழந்தைப்பருவம் மிகவும் அழகானது. மிகவும் குதூகலமானது. எந்த கவலைகளும் இல்லாமல் நிம்மதியாய் உறங்குவதும், அங்குமிங்கும் ஓடித் திரிந்து ஆனந்தத்தில் திளைப்பதும் குழந்தை பருவத்தில் மட்டுமே சாத்தியம். நம் அனைவருக்கும் நம்முடைய குழந்தை பருவத்தை நினைக்கும் போது எங்கிருந்தோ அளவற்ற உற்சாகம் வந்து ஒட்டிக் கொள்ளும்.

மணிக்கணக்கில் நண்பர்களோடு வீதியில் விளையாடியதும், செம்மண் கறை படிந்த பள்ளிச் சீருடையும், மழை நீரில் பேப்பர் கப்பல் செய்து விட்டதும், ஆறு, குளங்களில் குதித்துக் கும்மாளமிட்டதும் நினைவுக்கு வந்தால் நீங்கள் நிச்சயமாக உங்கள் குழந்தை பருவத்தை முழுவதும் கொண்டாடி இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதெல்லாம் 90 களில் பிறந்த குழந்தைகளுக்கு பின் காண முடியவில்லையே ஏன்? ஏனென்றால் இன்று நாம் குழந்தைகளை குழந்தைகளாக வளர விடவில்லை என்பதுதான் உண்மை.

குழந்தைகளை மண்ணில் விளையாட விட்டால் நோய் தொற்று ஏற்பட்டுவிடும் என்று பெரும்பாலான பெற்றோர் நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறான புரிதலே!!!!!! மண்ணில் காணப்படும் ஒரு வகை மைக்ரோ பாக்டீரியாக்கள் கீழ்கண்ட பணிகளைச் செய்கின்றன

1. பிள்ளைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கிறது
2. மன நிலையை சாந்தமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது.
3. அவர்கள் தனித்துவமாக சிந்திப்பதை ஊக்குவிக்கிறது.
4. பிள்ளைகளை நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களாக மாற்றுகிறது.

இவையெல்லாம் ஆராய்ச்சி முடிவுகள் விளக்கும் உண்மைகள். இதையெல்லாம் நமக்கு புரிய வைக்க ஆராய்ச்சி முடிவுகள் தேவைப்படுகின்றன.. #காலத்தின் கட்டாயம்

சமீபத்திய ஆய்வுகள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வளரும் பிள்ளைகளுக்கு விட்டமின் ‘D’ குறைவாக இருப்பதாகவும் இதன் காரணமாக எலும்புகள் மெல்லியதாகவும் எளிதில் உடைந்து விடக்கூடிய அபாயமும் இருப்பதாக தெரிவிக்கின்றன. குழந்தைகளை வெயிலில் வெளியே விளையாட அனுப்பாமல் வீட்டிற்குள் முடக்கி வைப்பதே இதற்கு காரணம். விளைவு சிறு வயதிலேயே வீடியோ கேம்ஸ், கம்பியூட்டர் விளையாட்டிற்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். ஓடியாடி விளையாட வேண்டிய வயதில் ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்கிறார்கள் பிஞ்சுக் குழந்தைகள்.

Freeyavidu - Dirt is good

இனிமேலாவது குழந்தைகளை எவ்வித தயக்கமும் இன்றி வெயிலிலும், மண்ணிலும் விளையாட அனுமதிப்போம். அவர்கள் வளர்ந்ததும் அசைபோட சிறு வயது நினைவுகள் வேண்டுமல்லவா !!!

கறை நல்லது !!!

பார்வைகள் பலவிதம் !

Freeyavidu - Sirukathaigal

வழக்கமாக தினமும் செல்லும் நூலகம் தான் என்றாலும் ஏனோ இன்று வாயிலை நெருங்கியதும் ஒருவித வித்தியாசமான உணர்வுடன் நின்றுவிட்டேன். காரணம் நூலகத்தினுள் முதல் இருக்கையில் அமர்ந்து செய்தித்தாளை மும்மரமாகப் படித்துக்கொண்டிருந்த தருணைப் பார்த்ததுதான். சிலநாட்களாகவே அவனிடம் ஒருசில விசயங்களைப் பேசவேண்டுமென சரியான நேரம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த போது இன்றைய தினம் கடவுளே வாய்ப்பைக் கொடுத்ததாய் நினைத்தேன். நூலகத்தினுள்ளும் அதிகமாக யாருமில்லாததால் இதைவிட அருமையான வாய்ப்பு கிடைக்காது என நினைத்துக் கொண்டே அவன் அருகில் சென்றபோது, திடீரென ஏதோ தடுக்க அமைதியாக புத்தகங்கள் இருக்கும் அலமாரி நோக்கி நடக்க ஆயத்தமாகிவிட்டேன். ஒவ்வொரு அடியாக நான் விலகி நடக்கையிலும் என் இதயம் அதிவேகமாக துடிக்கும் சத்தத்தை என்னால் நன்றாக உணர முடிந்தது. என் கால்கள் தள்ளி நடந்து கொண்டிருந்தாலும் என் மனம் அவன் அருகிலேயே சுற்றிக் கொண்டிருந்தது.

எனக்குக் கிடைத்த நண்பர்களிலேயே சிறிது வித்தியாசமானவன், அதே சமயம் அதிக அன்பானவன். வெளித்தோற்றம் பார்க்கையில் வெறுப்பானவனாக இருந்தாலும் பழகுவதற்கு எளிதானவன் இனிதானவன். அதனால் அவன் எப்போதும் எனக்கு முக்கியமான தோழன்.

சில மாதங்களுக்கு முன்புவரை நாங்கள் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாய் இருந்தோம். எந்த பாகுபாடுமின்றி எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வோம், ஒன்றாய் அமர்ந்து ஓயாமல் பேசிக் கொண்டிருப்போம். நாங்கள் பேசிக்கொள்ளாத நாட்களே இருந்ததில்லை. நட்பைவிடவும் எங்களுக்குள் ஆழமான புரிதல் இருந்தது. ஊரே பொறாமைப்படும் அளவு ஒற்றுமையாய் இருந்தோம். திடீரென யார் கண்கள் பட்டதோ எங்கள் உறவில் விரிசல் விழ ஆரம்பித்தது. ஏதோ ஒரு சிறிய விசயம் எங்களுக்குள் சண்டையாக வளர ஆரம்பித்தது. அதை முளையிலேயே கிள்ளி எறிய முயற்சி செய்தபோது அது எதிர்பாராத விதமாக படிப் படியாய் வளர ஆரம்பித்தது. முடிவில் அது எங்களுக்குள் பிரிவை உண்டாக்கியது.

நானும் எவ்வளவோ முயன்றும் அவனை என்னால் சமாதானமாக்க முடியவில்லை. நான் சமாதானமாக்க முயன்ற ஒவ்வொரு முயற்சியும் எங்கள் பிரிவை வழுவாக்கிக் கொண்டே சென்றது. அப்படி ஒருநாள் நான் சமாதானம் பேச முயன்றபோது அவன் கூறிய வார்த்தைகள் “நீ என்னைப் போல இல்லை. நாம் இருவரும் குணத்தில் எதிரெதிரானவர்கள். நீ என்னுடன் இருந்தால் மிகவும் கஷ்டப்படுவாய், என்னை விட்டு விலகி சந்தோசமாக இரு. நான் மிகவும் மோசமானவன்” என்னை அதிகம் யோசிக்க வைத்தது.

அவனுடன் இருப்பது தான் என் ஒரே சந்தோஷம் என சத்தம்போட தோன்றினாலும், அவன் தனித்துவமாக இருப்பது தான் நான் அவனிடம் நட்புகொள்ள ஆசைப்பட காரணம். அப்படியிருக்க நான் அவன்போல இல்லை எனக்கூறிய காரணம் எனக்கு வெறுப்பைத் தந்ததால் நான் அன்றுடன் அவனிடம் சமாதானம் பேசும் முயற்சியைக் கைவிட்டு விட்டேன். எங்களுக்குள் சண்டை ஏற்பட்டதை அறிந்த என்னைச் சுற்றியிருந்தவர்கள் ஆளுக்கு ஒன்றாய் தருணைப் பற்றிய தவறான தகவல்களாய் கூறி எனக்கு அவனைப் பற்றிய மோசமான பிம்பத்தை உண்டாக்க முயன்றனர். முதல்முறை அது வெறுப்பாக இருந்தாலும், போகப்போக பழகிவிட்டது.

இப்படியே சில நாட்கள் கடந்த போதுதான், ஒருநாள் அவனாக என்னுடன் பேச முற்பட்டான். அன்றைய நாள் நான் மோசமான மனநிலையில் இருந்தபோது, அதை மேலும் அதிக படுத்தும் விதமாக நான் அவனைப்பற்றிய தவறான பிம்பத்தை பொய்யாக உருவாக்குவதாய் வாதாடினான். ஒருகட்டத்தில் எனக்கு எரிச்சல் அதிகமாகவே உன்னைப் பற்றி பேச எனக்கு என்ன உரிமை இருக்கிறது என்றேன். மறுவார்த்தை ஏதும் பேசாமல் சென்றுவிட்டான். சிறிது நேரம் கழித்து சிந்தித்த போதுதான் அறிந்தேன் நான் கூறிய வார்த்தைகள் அவனை எவ்வளவு காயப்படுத்தியிருக்கும் என்று.

அவனுக்காக என் வாழ்வில் நான் எத்தனை முறை முன்னுரிமை தந்திருப்பேன். அவனிடம் பேச எவ்வளவு நாட்கள் எதிர்பார்திருப்பேன், எவ்வளவு முறை பேசச் சொல்லி கெஞ்சியிருப்பேன். அப்படியிருந்தும் ஏன் கோபத்தில் என்ன உரிமை? எனக் கேட்டுவிட்டேனென என்னை குற்ற உணர்வு குத்திக் கொண்டே இருக்க, அவனிடம் மன்னிப்பு கேட்க நான் நாள் தேடிக் கொண்டிருந்த சமயம். இன்று அருமையான வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்தாமல் அலமாரி நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தேன்.

அப்போது அந்த நூலக பொறுப்பாளர் என் எதிரே சிரித்துக் கொண்டே வந்தார். தினசரி வாடிக்கையாளர் என்பதால் எப்போதும் அவர் என்னுடன் ஏதாவது பேசிவிட்டுதான் செல்வார். இன்று எனக்குள் ஆயிரம் சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்ததால் நான் அவரிடம் ஏதும் பேசாமல் வெறுமனே சிரித்துவிட்டு புத்தக அலமாரி அருகில் சென்றேன். என் கைகள் புத்தக அலமாரியில் எதையோ தேடினாலும் மனம் முழுக்க வாசலில் அமர்ந்திருந்த தருணிடம் பேச எத்தனித்தது. அந்த சமயம் நூலக பொறுப்பாளர் என் அருகே வந்து எனக்காக புத்தகங்களை சிபாரிசு செய்து கொண்டிருந்தார்.

என் மனதூண்டலை அதற்கு மேலும் பொறுக்கமுடியாமல், அவரிடம் ஒரு சில நிமிடங்களில் தருணுடன் பேசிவிட்டு வருதாய் சொல்லிவிட்டு தருணை நோக்கி நடந்தேன். அவன் எப்படியும் என்னுடன் பேச விரும்பமாட்டான் எனத் தெரிந்திருந்தாலும் மன்னிப்பு கேட்க அவன் முன் நின்றேன். உன்னிடம் நான் இரண்டு நிமிடங்கள் பேச வேண்டும், “முதலில் உரிமை இல்லைனு சொன்னதுக்கு மன்னிச்சுரு. நான் ஏதோ கெட்ட மனநிலையில இருந்தேன் அதான் அப்படி சொல்லிட்டேன். நீ எப்பவுமே எனக்கு ரொம்ப முக்கியமான நண்பன். உன்னை விட்டு பிரிய கூடாதுனு நான் முயற்சி செய்றப்ப எல்லாம் நமக்குள்ள விரிசல் அதிகமாகுது அதுதான் நான் எந்த முயற்சியும் எடுக்கறது இல்லை. மத்தபடி நீ எப்பவுமே எனக்கு நண்பன் தான். உனக்கு மன்னிக்க தோணுறப்ப எங்கூட பேசு அதுவரைக்கு உன்னை தொந்தரவு பண்ணமாட்டேன்”. மொத்தமாக சொல்லி முடிக்கும் வரை அவன் நிமிர்ந்து கூட என்னை கவனிக்கவே இல்லை, செய்தித் தாளிலேயே முகம் பதித்திருந்தான்.

நான் கூறிய எதையாவது அவன் காதில் வாங்கினானா எனக் கூட தெரியவில்லை. இதை நான் எதிர்பார்த்தது தான் என்பதால் எனக்குள் எந்த ஏமாற்றமும் இல்லை. ஒருவழியாக மனபாரத்தை இறக்கி வைத்தபின் புத்தக அலமாரி அருகில் சென்றால், நூலக பொறுப்பாளர் சிரித்தபடியே எனக்காக நின்றிருந்தார். எங்களுக்குள் சிறிய தவறான புரிதல் அதை சரிசெய்ய தான் முயற்சி செய்கிறேன் என்றேன். அவர் அதற்கு, தருணை மிகவும் நல்லவன். பொறுப்பானவன். எப்போதும் தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பான், நல்ல மனசு அவனுக்கு என்றார். நானும் சிரித்தபடியே அதை ஆமோதித்தேன் காரணம் இத்தனை நாட்களில் அவனைப் பற்றி நான் கேட்கும் சிறந்த விமர்சனம் இது என்பதால்.

அப்போது தான் யோசித்தேன் ஒவ்வொரு பார்வையும் ஒவ்வொரு விதம் என்பதை. ஒரே விசயத்தை நல்லவிதமாக பார்க்கையில் சிறந்ததாகவும், எதிர்மறையாக பார்க்கையில் மோசமானதாகவும் தோன்றுகிறது. அதனால் தானோ என்னவோ தருண் எல்லோருக்கும் மோசமானவனாகத் தெரிய எனக்கும் நூலக பொறுப்பாளருக்கும் மட்டும் நல்லவனாகத் தோன்றுகிறான்.

ஜாதிகள் இல்லையடி பாப்பா !!!

Freeyavidu - ஜாதிகள் இல்லையடி பாப்பா

ஜாதியை ஒழித்திட இளைஞர்கள் கலப்புத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே தற்காலத்தில் பலரது கருத்தாக உள்ளது. ஜாதியை ஒழித்திட கலப்புத் திருமணம் மட்டுமே தீர்வாகாது. நீங்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டாலும் உங்கள் பிள்ளையை பள்ளியில் சேர்க்க நீங்கள் எப்படியும் ஜாதிச் சான்றிதழை பள்ளியில் சமர்பிக்கத்தான் வேண்டும்.

ஜாதியின் பெயரால் இழைக்கப் படும் அவலங்கள் களையப்பட வேண்டும் என்ற எண்ணம் மிகச் சரியானதுதான். இதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதற்கான சரியான வழிமுறைகளை நாம் கையாள்கிறோமா என்றால் இல்லை எனலாம்.

குழந்தையை பள்ளியில் சேர்க்கச் சென்றால் அப்ளிக்கேஷன் பார்மில் முக்கிய தகவல்களுடன் ஜாதியின் பெயரையும் குறிப்பிடச் சொல்கிறார்கள். கல்வி கற்கும் இடத்தில் ஜாதியின் அவசியம் என்ன? அதோடு விட்டார்களா.. இன்ஜினியரிங் கவுன்சிலிங், அரசு வேலை என அனைத்திற்கும் ஜாதி வாரியாக இட ஒதுக்கீடு. அதற்கேற்றார் போல் மதிப்பெண் வேறுபாடுகளும்..

உயர் வகுப்பில் பிறந்த அனைவரும் சகல வசதிகளும் படைத்தவர்கள் இல்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அனைத்து உரிமைகளும் மறுக்கப் படுவதும் இல்லை.

பிறகு எதற்கு இந்த பிரிவினை. இப்படி ஒரு குழந்தையின் பள்ளிப்பருவத்திலிருந்து கல்லூரிக் காலம் வரை அனைத்திலும் ஜாதியின் பெயரை நுழைத்துவிட்டு திருமணம் என்று சொல்லும் போது மட்டும் ஜாதிகள் இல்லை என்று அவனை நம்பச் சொன்னால் எப்படி?

திறமை இருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்படும் அவலம் அனுதினமும் நம் கண் முன்னே அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதை தடுக்க திறமையுள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். கல்வி, மருத்துவம் இதர பிற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் சமமாக கிடைக்கும் படி செய்ய வேண்டும்.

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே பாடினார் பாரதியார். ஆனால் சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் அதை நாம் செயல் படுத்தவில்லை என்பதுதான் கசப்பான உண்மை !!!


தேசிய கவி சுப்ரமணிய பாரதியார் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!

பிறப்பு: டிசம்பர் 11, 1882

பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)

நம் நினைவுகளுடன்…

FreeyaVidu -Kavithai Corner-Tamil Kathal Kavithai

நீ இல்லா இந்த இரவு நேரத்திலும்..
நாம் அமர்ந்த வீட்டுச்சுவர்..
நான் மறந்த நம் நேசக் கதையை காற்றில் கலந்து காதலுடனே என் காதில் கரையுதடி..
உன்னை என்னிடமிருந்து பிரிக்க முடிந்த காலத்தால்..
என்னிடமிருக்கும் உன் நினைவுகளைப் பிரிக்க சக்தியில்லை..

நம்மைப் பிரிக்க முயற்சி செய்யும் இக்காலமே ஓர் நாள் அயற்சி கொண்டு
தன் தோல்வியை ஒற்றுக் கொண்டு நம்மைச் சேர்த்து வைக்கும்…
அதுவரை உன்னால் நான் ரசிக்கக் கற்ற இரவின் அழகில்..
தனிமை தரா நம் நினைவுகளுடன்…

செல்வி ஜெ. ஜெயலலிதா என்னும் நான்….

jayalalitha

தமிழக அரசியலில் அதுவும் பெண்கள் பெரிதாக பங்கெடுத்துக் கொள்ளத் தயங்கும் காலகட்டத்திலே தனி ஒரு பெண்மணியாய் அரசியலில் கோலோச்சிய பெருமை ஜெயலலிதாவை மட்டுமே சேரும். எதிர்கட்சிகளுக்கு மட்டுமல்ல, தன்னை எதிர்த்த அனைவருக்கும் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் அவர்!!

“நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், அறிவுடன் கூடிய கர்வமுமே பெண்ணியம்” என்ற பாரதியின் வரிகள் இவருக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். இந்தியாவில் அதிமுக வை மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கிய பெருமை இவரையே சேரும். சட்ட சபையில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும்போது இந்த கேள்வியை கேட்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என கேட்கும் துணிச்சல் இவரைத் தவிர வேறு யாருக்கு வரும்.

ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்தே விலகி விடலாம் என்று எண்ணியவர்க்கு விதியோ வேறு சில திட்டங்களை வைத்திருந்தது. தமிழக முதல்வராக ஆறு முறை பதவியேற்று வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

ஒரு பெண்ணை பலவீனப்படுத்த வேண்டும் என்றால் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சிப்பதை பழக்கமாகக் கொண்டவர்கள் அரசியல்வாதிகள். அந்த வகையில் இவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் விமர்சனத்திற்கு உள்ளானது. விமர்சனங்களுக்கு பயப்படுபவர்கள் பொது வாழ்வில் வெற்றி பெறுவது இல்லை. இவை எப்போதுமே ஜெயலலிதாவின் போக்கை எந்த காலத்திலும் மாற்றியது இல்லை.

கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற கம்பீரத்துடன் கண்ணசைவில் கட்டளைகளை நிறைவேற்றி கட்சியை கட்டுக்கோப்பாய் வழிநடத்தியவர்.வலியச் சென்று யாரிடமும் நட்பு பாராட்டுவதோ, முகஸ்துதி செய்வதோ இவரிடம் துளியும் இல்லை.

வசிஷ்டரிடமிருந்து பிரம்மரிஷி பட்டம் பெற்றது போல இவர் கருணாநிதியால் ” நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்” என்று பாராட்டப் பட்டிருக்கிறார்.

நுனி நாக்கு ஆங்கிலம், தைரியம், எதையும் லாவகமாக கையாளும் பண்பு, இவற்றுடன் அரசியல் சாணக்கிய தனத்திலும் சிறந்து விளங்கினார் ஜெ. இவரின் ” மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற வரிகள் அரசியல் பொதுக்கூட்டங்கள் அனைத்திலும் தவறாமல் இடம்பெற்றிருந்தது.

இவர் ஆட்சி செய்த வரை தமிழகத்தில் மீத்தேன் எரிவாயு திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என எதுவும் தமிழகத்தில் ஆரம்பிக்கப் படவில்லை. இவரின் ஆட்சி காலத்தில் இவற்றையெல்லாம் தமிழகத்தில் திணித்து விட முடியாது என்பதையும் மத்திய அரசு அறிந்தே வைத்திருந்தது.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக நடுநிலையான ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பதே இவரின் கனவாக இருந்தது ஆனால் அதற்குள் காலன் முந்திக் கொண்டான். இவர் இருக்கும் வரை இவரின் அருமை நமக்குத் தெரியவில்லை. இப்போது நடக்கும் அரசியல் குழப்பங்களைப் பார்க்கையில் தான் புரிகிறது இவர் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா?

நாற்பது வருட அரசியல் இவரை பக்குவப்படுத்தியிருக்கிறது. பதம் பார்த்திருக்கிறது. ஆனால் பாதுகாத்திருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

செல்வி ஜெ. ஜெயலலிதா என்னும் நான் என்ற குரல் இனி என்று ஒலிக்கும்????

J-Jayalalithaa

தமிழ்நாட்டு அரசியலில் இப்படியொரு புரட்சித் தலைவி இருந்ததும் இல்லை. இனி ஓர் ” அம்மா ” கிடைப்பார் என்பதிலும் நம்பிக்கை இல்லை.

ஜெயலலிதா இந்த நூற்றாண்டின் சிறந்த ஆளுமையே என்பதில் சிறிதும் ஐயமில்லை.

என்றும் அன்புடன்…

Tamil love poem girl

நிலவாக உன்னை என் வானில் வைத்து ரசித்தேன்…
நிஜத்தில் அமாவாசையாகவும்..
நினைவுகளில் பௌர்ணமியாகவும் வாழ்கிறாய்…

நான் விரும்புவது எதுவும் எனக்குக் கிடைக்காது என விதி இருக்க…
நீ மட்டும் என்ன விதிவிலக்காகவா இருந்துவிடப் போகிறாய்…

எது வேண்டுமானாலும் நடக்கட்டும்..
எப்படி வேண்டுமானாலும் வாழ்க்கை மாறட்டும்…
எப்போதும் உன்மேல் நான் கொண்ட காதல்…
எள் அளவும் மாறாது…

என்றாவது உனக்கு ஒருவார்த்தை..
என்னிடம் பேச தோன்றினால் அதற்காக மட்டும்..
என் ஆயுள் முழுக்க வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பேன்…..!
– என்றும் உன்பால் அன்புடன்…

Ithu Freshu