குழந்தையும் பொம்மையும்…

FreeyaVidu - Sirukathaigal - Teddy

அந்த குழந்தை தினமும் பள்ளி செல்லும் போது, வழியில் உள்ள அந்த கடையின் அலமாரியில் வைக்கப் பட்டிருக்கும் அந்த பெரிய கரடி பொம்மையை சற்று நின்று பார்காமல் செல்லமாட்டாள். வீடு திரும்பும் போதும் இதே கதை தான். குழந்தைக்கு அந்த கரடி பொம்மையை மிகவும் பிடிக்கும். அதை ஒருமுறையேனும் தொட்டாவது பார்க்கவேண்டுமென்ற ஆவல். நாட்கள் சென்றுகொண்டிருக்கின்றன, ஆனால் குழந்தைக்கு கரடி பொம்மை மீதான ஈர்ப்பு குறையவில்லை.

ஒருநாள் அந்த குழந்தை வீட்டிற்க்கு வரும் போது ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. அவள் காத்திருந்த அதே பொம்மை விதியால் அவளுக்காக வீட்டில் காத்திருந்தது. தன் மகளுக்காக அப்பா வாங்கிவைத்திருந்தார். குழந்தைக்கு தலைகால் புரியாத அளவு மகிழ்ச்சி. தினமும் அந்த பொம்மையை வைத்து அந்த குழந்தை சந்தோஷமாக விளையாடியது. அந்த குழந்தைக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ அதே அளவு அந்த பொம்மையும் அவளுடன் இருக்கும் நேரங்களில் சந்தோஷமாக இருந்தது. கொஞ்ச கொஞ்சமாய் அந்த பொம்மைக்கும் அந்த குழந்தையை பிடிக்க ஆரம்பித்தது. இருவரும் நேசத்தில் நிறைந்தனர். இருவருக்கும் அடுத்தவரை பிடித்தது, ஒன்றாக இருக்கும் நேரங்களை கொண்டாடினர்.

FreeyaVidu - Sirukathaigal - Teddy1

காலம் ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டிருப்பதால் பல மாற்றங்கள் ஏற்படுவது சகஜம் தான். திடீரென அந்த குழந்தைக்கு அந்த கரடி பொம்மையை பிடிக்காமல் போய்விட்டது போல, இப்பொழுதெல்லாம் அவள் அந்த கரடி பொம்மையை தொடுவது கூட இல்லை. எந்த கரடி பொம்மையை தூரமாய் நின்று ரசித்தாளோ, எதை அருகில் வைத்து கொஞ்சினாளோ, எதனுடன் அவளது அருமையான நேரத்தை செலவிட்டாளோ, அதிகப்படியாக எதனுடன் பல விசயங்களை பகிர்ந்து கொண்டாளோ அதே பொம்மையை இன்று கவனிக்கக் கூட அவளுக்கு நேரமில்லை. அந்த கரடி பொம்மையும் குழந்தை இன்றாவது நம்முடன் விளையாட வரும் என தினமும் காத்திருந்து ஏமாற்றமடைந்து கொண்டே இருந்தது.

இவ்வளவு நாட்கள் நம்முடன் மகிழ்ச்சியாய் விளையாடிய குழந்தைக்கு ஏன் திடீரென நம்மை பிடிக்கவில்லை, நாம் ஏதேனும் தவறு செய்துவிட்டோமா? இல்லை அவளை தெரியாமல் காயப்படுத்திவிட்டோமா? என பொம்மைக்கு ஆயிரம் கேள்விகளும் குழப்பங்களும். எப்படியாவது இந்த நிலைமை சரி செய்ய அந்த பொம்மை விரும்பி பல முயற்சிகள் செய்து அனைத்தும் தோல்வியில் முடிந்தன. முடிவாக குழந்தையிடமே இதற்கான காரணம் கேட்க, குழந்தை சாதாரணமாக கூறியது, என்னுடன் நீ இருந்தால் நான் உன்னை காயப்படுத்திவிடுவேன். நீ என்னை விட்டு விலகி இருந்தால் தான் சந்தோஷமாய் இருப்பாய். நீ எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டுமென ஆசைபடுகிறேன் அதனால் தான் உன்னை விட்டு விலகியிருக்கிறேன் என்றாள். இதை போன்ற ஒரு பதிலை அந்த கரடி பொம்மை சிறிதும் எதிர்பார்கவில்லை.

நீ என்னுடன் விளையாடாமல் இருப்பது எனக்கு வலிப்பதை விடவா நீ என்னை காயப்படுத்தி வலிக்க போகிறது என்றது பொம்மை. ஆனால் குழந்தையோ எதைப் பற்றியும் கவலைபடாமல் நான் ஒருமுறை முடிவுசெய்தால் எதற்காகவும் மாறமாட்டேன் என கூறிசென்றுவிட்டது.

FreeyaVidu - Sirukathaigal - Teddy2

கரடி பொம்மைக்கு என்ன செய்வது என புரியாமல் தவித்தது. சில நாட்கள் கடந்த பின் தான் அதற்கு சில உண்மைகள் புரிந்தது. தன்னுடனான உறவு குழந்தைக்கு சலித்துவிட்டது. இப்போது அந்த குழந்தைக்கு தன்னைவிட சிறந்த வேறு உறவு கிடைத்திருக்கலாம். தன்னை விட்டு பிரியவேண்டும் என்பதற்காக அந்த குழந்தை பல காரணங்கள் சொல்வதை உணர்ந்த அது, இதற்கு மேலும் குழந்தையிடம் கெஞ்சுவதை விரும்பாமல் அந்த கரடி பொம்மை வாழ்க்கையின் நிதர்சணத்தை ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டது. ஆனால் ஒன்று உறுதி இன்னமும் பல வருடங்களுக்கு பிறகு என்றாவது அந்த கரடி பொம்மையை பார்த்தால் குழந்தைக்கு அவர்கள் விளையாடியது நினைவுக்கு வரலாம், ஆனால் அந்த கரடி பொம்மைக்கு எப்போதுமே அந்த குழந்தையுடன் இருந்த நினைவுகள் மட்டும் நிஜமாய் இருக்கும்.

நிச்சயமாக நம்ம வாழ்க்கையிலும் நாம சிலரிடம் குழந்தையாகவும், சிலர் முன்னாடி அந்த கரடி பொம்மையாகவும் இருப்போம். குழந்தையோட பார்வையில் அது செய்வது மிகச் சரி, ஒருவேளை அந்த பொம்மைக்கு உணர்வுகள் இல்லை என்றால் நானும் குழந்தை செய்வதை தவறு என்று  சொல்லமாட்டேன். ஆனால் அந்த கரடி பொம்மைக்கு உணர்விருந்து, அதோட பார்வையில் இருந்து பார்த்தா குழந்தை செய்றது, மிகப்பெரிய துரோகம். நாம பொம்மையா இருந்து காயப்பட்டா தப்பு இல்லை. ஆனா அந்த குழந்தையா இருந்து வாழ்க்கையில யாரையும் காயபடுத்தி விடக் கூடாது.