பார்வைகள் பலவிதம் !

Freeyavidu - Sirukathaigal

வழக்கமாக தினமும் செல்லும் நூலகம் தான் என்றாலும் ஏனோ இன்று வாயிலை நெருங்கியதும் ஒருவித வித்தியாசமான உணர்வுடன் நின்றுவிட்டேன். காரணம் நூலகத்தினுள் முதல் இருக்கையில் அமர்ந்து செய்தித்தாளை மும்மரமாகப் படித்துக்கொண்டிருந்த தருணைப் பார்த்ததுதான். சிலநாட்களாகவே அவனிடம் ஒருசில விசயங்களைப் பேசவேண்டுமென சரியான நேரம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த போது இன்றைய தினம் கடவுளே வாய்ப்பைக் கொடுத்ததாய் நினைத்தேன். நூலகத்தினுள்ளும் அதிகமாக யாருமில்லாததால் இதைவிட அருமையான வாய்ப்பு கிடைக்காது என நினைத்துக் கொண்டே அவன் அருகில் சென்றபோது, திடீரென ஏதோ தடுக்க அமைதியாக புத்தகங்கள் இருக்கும் அலமாரி நோக்கி நடக்க ஆயத்தமாகிவிட்டேன். ஒவ்வொரு அடியாக நான் விலகி நடக்கையிலும் என் இதயம் அதிவேகமாக துடிக்கும் சத்தத்தை என்னால் நன்றாக உணர முடிந்தது. என் கால்கள் தள்ளி நடந்து கொண்டிருந்தாலும் என் மனம் அவன் அருகிலேயே சுற்றிக் கொண்டிருந்தது.

எனக்குக் கிடைத்த நண்பர்களிலேயே சிறிது வித்தியாசமானவன், அதே சமயம் அதிக அன்பானவன். வெளித்தோற்றம் பார்க்கையில் வெறுப்பானவனாக இருந்தாலும் பழகுவதற்கு எளிதானவன் இனிதானவன். அதனால் அவன் எப்போதும் எனக்கு முக்கியமான தோழன்.

சில மாதங்களுக்கு முன்புவரை நாங்கள் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாய் இருந்தோம். எந்த பாகுபாடுமின்றி எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வோம், ஒன்றாய் அமர்ந்து ஓயாமல் பேசிக் கொண்டிருப்போம். நாங்கள் பேசிக்கொள்ளாத நாட்களே இருந்ததில்லை. நட்பைவிடவும் எங்களுக்குள் ஆழமான புரிதல் இருந்தது. ஊரே பொறாமைப்படும் அளவு ஒற்றுமையாய் இருந்தோம். திடீரென யார் கண்கள் பட்டதோ எங்கள் உறவில் விரிசல் விழ ஆரம்பித்தது. ஏதோ ஒரு சிறிய விசயம் எங்களுக்குள் சண்டையாக வளர ஆரம்பித்தது. அதை முளையிலேயே கிள்ளி எறிய முயற்சி செய்தபோது அது எதிர்பாராத விதமாக படிப் படியாய் வளர ஆரம்பித்தது. முடிவில் அது எங்களுக்குள் பிரிவை உண்டாக்கியது.

நானும் எவ்வளவோ முயன்றும் அவனை என்னால் சமாதானமாக்க முடியவில்லை. நான் சமாதானமாக்க முயன்ற ஒவ்வொரு முயற்சியும் எங்கள் பிரிவை வழுவாக்கிக் கொண்டே சென்றது. அப்படி ஒருநாள் நான் சமாதானம் பேச முயன்றபோது அவன் கூறிய வார்த்தைகள் “நீ என்னைப் போல இல்லை. நாம் இருவரும் குணத்தில் எதிரெதிரானவர்கள். நீ என்னுடன் இருந்தால் மிகவும் கஷ்டப்படுவாய், என்னை விட்டு விலகி சந்தோசமாக இரு. நான் மிகவும் மோசமானவன்” என்னை அதிகம் யோசிக்க வைத்தது.

அவனுடன் இருப்பது தான் என் ஒரே சந்தோஷம் என சத்தம்போட தோன்றினாலும், அவன் தனித்துவமாக இருப்பது தான் நான் அவனிடம் நட்புகொள்ள ஆசைப்பட காரணம். அப்படியிருக்க நான் அவன்போல இல்லை எனக்கூறிய காரணம் எனக்கு வெறுப்பைத் தந்ததால் நான் அன்றுடன் அவனிடம் சமாதானம் பேசும் முயற்சியைக் கைவிட்டு விட்டேன். எங்களுக்குள் சண்டை ஏற்பட்டதை அறிந்த என்னைச் சுற்றியிருந்தவர்கள் ஆளுக்கு ஒன்றாய் தருணைப் பற்றிய தவறான தகவல்களாய் கூறி எனக்கு அவனைப் பற்றிய மோசமான பிம்பத்தை உண்டாக்க முயன்றனர். முதல்முறை அது வெறுப்பாக இருந்தாலும், போகப்போக பழகிவிட்டது.

இப்படியே சில நாட்கள் கடந்த போதுதான், ஒருநாள் அவனாக என்னுடன் பேச முற்பட்டான். அன்றைய நாள் நான் மோசமான மனநிலையில் இருந்தபோது, அதை மேலும் அதிக படுத்தும் விதமாக நான் அவனைப்பற்றிய தவறான பிம்பத்தை பொய்யாக உருவாக்குவதாய் வாதாடினான். ஒருகட்டத்தில் எனக்கு எரிச்சல் அதிகமாகவே உன்னைப் பற்றி பேச எனக்கு என்ன உரிமை இருக்கிறது என்றேன். மறுவார்த்தை ஏதும் பேசாமல் சென்றுவிட்டான். சிறிது நேரம் கழித்து சிந்தித்த போதுதான் அறிந்தேன் நான் கூறிய வார்த்தைகள் அவனை எவ்வளவு காயப்படுத்தியிருக்கும் என்று.

அவனுக்காக என் வாழ்வில் நான் எத்தனை முறை முன்னுரிமை தந்திருப்பேன். அவனிடம் பேச எவ்வளவு நாட்கள் எதிர்பார்திருப்பேன், எவ்வளவு முறை பேசச் சொல்லி கெஞ்சியிருப்பேன். அப்படியிருந்தும் ஏன் கோபத்தில் என்ன உரிமை? எனக் கேட்டுவிட்டேனென என்னை குற்ற உணர்வு குத்திக் கொண்டே இருக்க, அவனிடம் மன்னிப்பு கேட்க நான் நாள் தேடிக் கொண்டிருந்த சமயம். இன்று அருமையான வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்தாமல் அலமாரி நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தேன்.

அப்போது அந்த நூலக பொறுப்பாளர் என் எதிரே சிரித்துக் கொண்டே வந்தார். தினசரி வாடிக்கையாளர் என்பதால் எப்போதும் அவர் என்னுடன் ஏதாவது பேசிவிட்டுதான் செல்வார். இன்று எனக்குள் ஆயிரம் சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்ததால் நான் அவரிடம் ஏதும் பேசாமல் வெறுமனே சிரித்துவிட்டு புத்தக அலமாரி அருகில் சென்றேன். என் கைகள் புத்தக அலமாரியில் எதையோ தேடினாலும் மனம் முழுக்க வாசலில் அமர்ந்திருந்த தருணிடம் பேச எத்தனித்தது. அந்த சமயம் நூலக பொறுப்பாளர் என் அருகே வந்து எனக்காக புத்தகங்களை சிபாரிசு செய்து கொண்டிருந்தார்.

என் மனதூண்டலை அதற்கு மேலும் பொறுக்கமுடியாமல், அவரிடம் ஒரு சில நிமிடங்களில் தருணுடன் பேசிவிட்டு வருதாய் சொல்லிவிட்டு தருணை நோக்கி நடந்தேன். அவன் எப்படியும் என்னுடன் பேச விரும்பமாட்டான் எனத் தெரிந்திருந்தாலும் மன்னிப்பு கேட்க அவன் முன் நின்றேன். உன்னிடம் நான் இரண்டு நிமிடங்கள் பேச வேண்டும், “முதலில் உரிமை இல்லைனு சொன்னதுக்கு மன்னிச்சுரு. நான் ஏதோ கெட்ட மனநிலையில இருந்தேன் அதான் அப்படி சொல்லிட்டேன். நீ எப்பவுமே எனக்கு ரொம்ப முக்கியமான நண்பன். உன்னை விட்டு பிரிய கூடாதுனு நான் முயற்சி செய்றப்ப எல்லாம் நமக்குள்ள விரிசல் அதிகமாகுது அதுதான் நான் எந்த முயற்சியும் எடுக்கறது இல்லை. மத்தபடி நீ எப்பவுமே எனக்கு நண்பன் தான். உனக்கு மன்னிக்க தோணுறப்ப எங்கூட பேசு அதுவரைக்கு உன்னை தொந்தரவு பண்ணமாட்டேன்”. மொத்தமாக சொல்லி முடிக்கும் வரை அவன் நிமிர்ந்து கூட என்னை கவனிக்கவே இல்லை, செய்தித் தாளிலேயே முகம் பதித்திருந்தான்.

நான் கூறிய எதையாவது அவன் காதில் வாங்கினானா எனக் கூட தெரியவில்லை. இதை நான் எதிர்பார்த்தது தான் என்பதால் எனக்குள் எந்த ஏமாற்றமும் இல்லை. ஒருவழியாக மனபாரத்தை இறக்கி வைத்தபின் புத்தக அலமாரி அருகில் சென்றால், நூலக பொறுப்பாளர் சிரித்தபடியே எனக்காக நின்றிருந்தார். எங்களுக்குள் சிறிய தவறான புரிதல் அதை சரிசெய்ய தான் முயற்சி செய்கிறேன் என்றேன். அவர் அதற்கு, தருணை மிகவும் நல்லவன். பொறுப்பானவன். எப்போதும் தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பான், நல்ல மனசு அவனுக்கு என்றார். நானும் சிரித்தபடியே அதை ஆமோதித்தேன் காரணம் இத்தனை நாட்களில் அவனைப் பற்றி நான் கேட்கும் சிறந்த விமர்சனம் இது என்பதால்.

அப்போது தான் யோசித்தேன் ஒவ்வொரு பார்வையும் ஒவ்வொரு விதம் என்பதை. ஒரே விசயத்தை நல்லவிதமாக பார்க்கையில் சிறந்ததாகவும், எதிர்மறையாக பார்க்கையில் மோசமானதாகவும் தோன்றுகிறது. அதனால் தானோ என்னவோ தருண் எல்லோருக்கும் மோசமானவனாகத் தெரிய எனக்கும் நூலக பொறுப்பாளருக்கும் மட்டும் நல்லவனாகத் தோன்றுகிறான்.