பார்வையில் பிழையிருந்தால் பிம்பமும் பிழையே…

FreeyaVidu - pexels - photo

நான் மூன்றாம் வகுப்பு பயின்ற போது நிகழ்ந்த சம்பவம். எங்கள் வகுப்பில் சகதோழி ஒருத்தி யாரிடமும் அதிகம் பேசமாட்டாள், தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பாள். அவளுக்கு எளிதில் கோபம் வந்துவிடும். ஆதலால் அவளைப் பார்த்தாலே எங்களுக்கு கொஞ்சம் நட்பு பாராட்ட தயக்கம் இருந்து கொண்டேயிருக்கும். காரணம் எங்களைப் பொருத்தவரை அவள் இரக்கமற்றவள் என நினைத்தோம்.

அப்படி இருக்கையில் ஒருநாள் நாங்கள் இடைவேளையில் விளையாடிக்கொண்டிருந்த சமயம் வகுப்பில் உடல்நிலை சரியில்லாத மற்றொரு மாணவி சரியாக அவள் அருகில் வந்த போது மயக்கம் வந்து அவள் மேல் சாந்து விட, அவள் படியின் விழிம்பிலிந்து கீழே உருண்டு விழுந்துவிட்டாள். கால்களில் சில சிராய்ப்புகளில் இரத்தம் வழிய அவள் எழுந்ததும், உடல்நிலை சரியில்லாத மாணவியின் நிலை மேலும் மோசமாகப் போகிறது என நினைத்தோம். ஆனால் அன்று அதற்கு மாறாக விழுந்தவள் எழுந்து சென்று உடல்நிலை சரியில்லாத மாணவியை தண்ணீர் தெளித்து எழுப்பி, இட்லி சாப்பிட கொடுத்தது மட்டுமின்றி ஆசிரியரிடம் கூறி அவளை மருத்துவரிடம் அழைத்துச் செல்லவதற்கான ஏற்பாடுகளையும் செய்தாள்.

அன்றுவரை நாங்கள் இரக்கமற்றவள் என நினைத்து ஒதுக்கியவள் அன்றிலிருந்து எங்கள் மதிப்பிற்குரியவளாகி சிறந்த நண்பர்களாகிவிட்டோம். அவளிடம் பழகிய பிறகு தான் அவள் உண்மையில் எவ்வளவு பாசமானவள் அன்பானவள் என்று புரிந்தது.

இதேபோல தான் உலகிலுள்ள எல்லா பொருட்களுமே உயர்வானவை, நாம் பார்க்கும் விதம் தவறாக இருப்பதாலேயே நம்மால் பல பொக்கிஷங்களை உணரமுடியால் உதறிக் கொண்டிருக்கிறோம். என் தோழி என்னிடம் அடிக்கடி கூறும் வார்த்தைகள் “பார்வையில் பிழை என்றால் பிம்பமும் பிழையாகத்தான் தெரியும்”.

உண்மைதான் நம் பார்வைகள் சில சமயங்களில் தவறாக இருப்பதால் அதில் காணும் பிம்பங்களும் தவறாக தோன்றுகிறது. ஆனால் நாம் பார்வையை மாற்றப் பழகாமல் எப்போதும் பிம்பத்தையே குற்றம் சொல்கிறோம்.

எந்த பிரச்சனைகள் யாருடன் ஏற்பட்டாலும் தவறு நிச்சயமாக இரண்டு பக்கமும் தான் இருக்கும். ஆனால் நாம் செய்த தவறுகளைப் பற்றி யோசிக்காமல் எதிராளியின் குறைகளை மட்டும் அழுத்தமாக பேசுவோம். காரணம் நம்மை யாரும் குற்றம் சொல்லக்கூடாது. அந்த பிரச்சனைக்கு முன்பு வரை நமக்கு நேசமாக தெரிந்தவர் பிரச்சனை வந்தவுடன் எதிராக தெரிவார் காரணம் நாம் அவரை பார்க்கும் விதம் நண்பனிலிருந்து எதிரி என்றாகியதால். நாம் மகிழ்வான மனநிலையுடன் வாழ்க்கையைப் பார்த்தால் அது சந்தோஷமான நிகழ்வுகளையே நினைவில் சேர்க்கும். நாம் எதிர்மாறாக பார்வையை செலுத்தினால் துக்கமும் துயரமுமே மிஞ்சும். சொல்ல நினைத்தை சொல்லிவிட்டோம் இனி முடிவு உங்களுடைதாகட்டும்…. புதிய பார்வை உங்களை மகிழ்சி வெள்ளத்தில் நனைக்கட்டும்..