எனக்கு மிகவும் பரிச்சயமான ஒருவர் தன் மகனை இந்த வருடம் பள்ளியில் சேர்க்கப் போவதாக கூறினார். இதில் என்ன இருக்கிறது என நான் நினைக்க அடுத்து அவர் சொன்ன விஷயங்களை கேட்டு அதிர்ந்தே போனேன். இன்றைய சூழலில் ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர் படும் பாட்டை கேட்டால் எனக்கு தலையே சுற்றியது..

அவர் கூறியதாவது பிள்ளையை ஜீன் மாதம் பள்ளியில் சேர்க்க ஆறு மாதங்களுக்கு முன்பே அப்ளிக்கேஷன் வாங்க அதிகாலையில் பள்ளியில் ஆஜராக வேண்டும். இது தவிர நேர்முகத்தேர்வுக்கு குறித்த நேரத்தில் செல்ல வேண்டும். இதாவது பரவாயில்லை, அவர்கள் கூறும் கல்வி கட்டணத்தை (பேருந்து கட்டணம், சிற்றுண்டி கட்டணம் உட்பட ) புன்னகைத்தவாறே குறித்த தேதியில் கட்டுவதாய் உறுதி அளிக்க வேண்டும். கல்வி கட்டணம் பெரிதாக ஒன்றும் இல்லை சில லட்சங்களே!!!!

இதையைல்லாம் கேட்ட பின்புதான் மனதில் ஏதோ ஒரு நெருடல்!!!! இவ்வளவு பாடுபட்டு பிள்ளையை பள்ளியில் சேர்த்து, அரும்பாடுபட்டு நாம் ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஊடகங்களின் வாயிலாக நமக்குத் தெரிய வரும் நிகழ்வுகள் நம் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவிகள் தற்கொலை, பேராசிரியர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை இவை தான் ஊடகங்களில் தற்சமயம் பரவலாக பேசப்படுபவை.

கல்வி என்பது நமக்கு விசாலமான அறிவைத் தருவதுடன், சரியெது தவறைது என்பதை கண்டறியும் பகுத்தறிவையும் நமக்கு தர வேண்டும். ஆனால் இன்றைய கல்வி முறை இதையெல்லாம் கற்பிக்கவில்லை என்பதை இந்நிகழ்வுகள் நமக்கு தெளிவாக காண்பிக்கின்றன. இப்பிள்ளைகள் தவறான முடிவை எடுப்பதற்கு முன் அந்த ஐந்து விநாடிகள் தம் பெற்றோரைப் பற்றியும், தன்னை வளர்க்க அவர்கள் பட்ட கஷ்டங்களையும் எண்ணிப் பார்த்திருந்தால் இப்படியொரு மரணமே நிகழ்ந்திருக்காதே!!! நாம் உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு சரியான முடிவெடுக்கத் தெரியாமல் தடுமாறும் பலவீனமான இளம் தலைமுறையை உருவாக்கி கொண்டு இருக்கிறோம் என்தில் சிறிதும் ஐயமில்லை.. மாற்றம் காண்பது எந்நாளோ ?????

வாழ்க்கை என்பது வெற்றி மட்டுமே நிறைந்த மலர் பாதையல்ல.. தோல்வி என்கின்ற முட்களும் அங்கு சகஜமே என்கிற யதார்த்தத்தை நம் பிள்ளைகளிடையே கொண்டு சேர்க்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கும் உண்டு. இதை சரிவர செய்தாலே வளரும் இளைய சமுதாயம் எதையும் எதிர்கொள்கின்ற மனப்பக்குவத்துடன் வளரும்…