தாகப்பட்டது, தமிழ் சினிமாவே எப்போதும் ஹீரோக்களின் பிடியில் தான் இருந்து வருகின்றது. இன்னும் பல வருடம் அப்படித்தான் இருக்கும் போல. ஆனால், அத்தனை ஹீரோக்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பது லேடி சூப்பர் ஸ்டார் தலைவி நயன் தான்.

டாப் ஹீரோக்கள் தவிர்த்து முன்னிலையில் இருக்கும் ஹீரோக்களுக்கு சற்றும் குறையாத சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை – சொல்லப்போனால் நடிகைகளில் சூப்பர் ஸ்டார்.

அப்பாவை கொன்றவர்களை பழிவாங்குவது , நாட்டை அழிக்க நினைப்பவர்களை கொல்வது , அரைச்ச மாவையே வறுத்து அரைத்த மசாலா தனமான படங்களாக இல்லாமல், கமெர்ஷியல் பீல்டப் எதுவும் இல்லாமல் 100 கோடி,200 கோடி வசூல் என ட்விட்டர் ல ரசிகர்களை கூவ சொல்லும் ஹீரோக்கள் எல்லாம் எப்போது அறம் போன்ற படங்களில் நடிப்பார்கள் ?

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என பல ஆயிரம் கோடிகள் செலவழிக்கும் நாம், நம் கண் அருகே உள்ள கண்மாய்கள்,ஏரிகள்,அணைகளைத் தூர் வாரி மழை நீரை சேமிக்க முடியாத அவலத்தில் இருக்கின்றோம். ஏன் ?

நிலவுக்கு மனிதனை அனுப்ப முடியும் நம்மால்ஆழ்துளை கிணற்றில் இருந்து ஒரு குழந்தையை மீட்க முடியாதா ??ஏன் எந்த அரசும் செய்யவில்லை?

கடலில் கொட்டிய எண்ணையை வழிக்க வாலியை வைத்திருக்கும் அரசு . இதுதான் நாம் சாதாரண மக்களுக்குகாக வைத்திருக்கும் மாபெரும் தொழில் நுட்பமா??

என பல கேள்விகள் படம் பார்க்கும்போது வருவதை தவிர்க்க முடியவில்லை ??

பொசுக்கென அப்படியே நம்மை வாரிக் கொள்கிற படம், அணுஅணுவாக மனசை பிசைந்து ரத்தகளறியாக்குகிறது..

ஒரு ஊர்ல

படத்தின் ஆரம்பத்திலேயே அதிகாரத்தை மீறியதற்காக தலைவி நயன்மீது ஒரு விசாரணை நடக்கின்றது. தலைவி தன் விளக்கத்தை சொல்வதில் இருந்து படம் தொடங்குகின்றது.

சென்னைக்கு வெளியே தண்ணீருக்கே பல கிலோ மீட்டர் சென்று எடுக்கும் நிலையில் ஒரு கிராமம். ஒரு வசதியும் இல்லாமல் இருக்கும் இடத்தில் தலைவி கலெக்டராக வருகின்றார்.

அந்த ஊரில் இருக்கும் குழந்தை ஒன்று ஆழ்துளை கிணறு ஒன்றில் விழுந்துவிடுகின்றது. அதை தொடர்ந்து அந்த குழந்தையை வெளியே எடுக்க தலைவி நயன் மற்றும் அந்த ஊர் மக்கள் எடுக்கும் பரபரப்பான முடிவே படத்தின் மீதிக்கதை.

உரிச்சா..

நீண்ட நாள்களுக்குப் பிறகு மக்கள் பிரச்சினைகளை வைத்து பளிச்சென்று எந்த வணிக சமரசமும் இல்லாமல் ஒரு படம் கொடுத்திருக்கிறார்கள்.

மாவட்ட ஆட்சியரான தலைவி நிகழ்ச்சிக்குச் செல்லும் வழியில் கிராம மக்கள் குடிநீருக்காகப் போராட்டம் நடத்துவதைப் பார்க்கிறார். உடனே அவர்களுக்கு குடிநீர் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டு பயணத்தைத் தொடரும்தலைவிக்கு , இன்னொரு கிராமத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தகவல் கிடைக்கிறது. நிகழ்ச்சியை ரத்துசெய்யச் சொல்லிவிட்டு உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைகிறார் தலைவி. அந்தக் குழந்தையை வெளியில் எடுக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகளும், அதனால் ஏற்படும் சோதனைகளும்தான் படத்தின் கதை.

முதல் நாள் காலையில் தொடங்கும் கதை, மறுநாள் காலையில் முடிந்துவிடுகிறது. ஆனால், அந்த ஒருநாள் முழுவதும் நம்மைப் பதைபதைப்புடன் வைத்திருக்கும் விதத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார்.

இந்தியாவில் ஆழ்துளை கிணற்றால் பல குழந்தைகள் இறந்துள்ளனர். இதில் கணக்கில் வந்தது ஒரு சில தான், ரூ 800 கோடி செலவில் ராக்கேட் விடும் நாம், இன்னும் ஆழ்துளையில் விழுந்த குழந்தையை காப்பாற்ற கையிறை பயன்படுத்துகின்றோம் என்பதை ஒரு கேரக்டர் கிண்டலாக கேட்பது நகைச்சுவை என்றாலும் யோசிக்க வேண்டிய விஷயம்.

தண்ணீருக்காக அல்லாடும் மக்களைத் திரையில் பார்க்கும்போது இந்த நிலை பரவலாக தமிழ்நாடு முழுவதுமே உள்ளதை நினைத்து கொஞ்சமாவது படம் பார்ப்பவர்கள் கவலைப்படுவார்கள். அந்த அளவு சொல்லப்படும் விஷயம் எதுவாக இருந்தாலும் அழுத்தமாகப் பதியப் படுகிறது.

படம் நெடுகிலும் ‘பொளேர்’ என்று அறைகிற வசனங்கள் உண்டு. ஆனால் எவரையும் காயப்படுத்தாமல்… அதிகார வர்க்கமே, அவமானத்தோடு ஒப்புக்கொள்ளும்படி காட்சிப்படுத்துகிறார் இயக்குநர்..

ஆள்துளைக் கிணறு’ என்ற சிறிய களத்தை வைத்துக் கடல் அளவு கேள்விகளை எழுப்புகிறார், இயக்குநர்.

அதிகாரம், அரசு அதிகாரியான நயன்தாராவிடம் கேள்வி கேட்கிறது.

அப்பாவி மக்கள், அதிகாரத்திடம் தங்களுடைய உரிமைக்காக, உயிருக்காக கேள்வி கேட்கிறார்கள்.

அரசு அதிகாரியான நயன்தாரா, சக அதிகாரிகளிடம் அதிகாரத்தை மீறிச் செயல்படுவதைக் குறித்து கேள்விகளைக் கேட்கிறார்.

படத்தின் இடையே வரும் தொலைக்காட்சி விவாத்தில் பங்கேற்ற சமூக ஆர்வலர்கள், மேல்தட்டு சமூகத்தை நோக்கி கேள்விகளை முன்வைக்கிறார்கள்.

இவர்கள் முன்வைக்கும் அத்தனை கேள்விகளும் ஒட்டுமொத்த அரசியலை நோக்கியதாக இருக்கிறது.

தலைவி

படத்தின் பெரும் பலம் தலைவி நயன்தாரா. இந்தப் படத்தில் நடித்ததற்காகதலைவிக்கு மிகப்பெரிய சல்யூட். தலைவியை நம்பி இனி எத்தனை கோடி பட்ஜெட் படங்கள் வேண்டுமானாலும் கொடுக்கலாம், அப்படி ஒரு ஸ்கிரீன் பிரசன்ஸ்.

இரண்டே உடைகள்தான் படம் முழுக்க. இவரைத் தவிர இன்னொரு நடிகையால் இப்படி ஒரு கதையைத் தாங்கியிருக்கவே முடியாது.
தலைவியின் தி பெஸ்ட் படம் என்று இதனைச் சொல்லலாம்.

ஹீரோவை துரத்திக் காதலிக்கும் காட்சிகள், ஜிகுஜிகு ஆடைகள் போன்றவற்றிலிருந்து பெரிய பிரேக். இனி
தலைவி மரத்தைச் சுற்றி டூயட் பாட வேண்டியதில்லை. ஹீரோக்கள் அரசியல் பேசும் காலத்தில், ஹீரோயினையும் அரசியல் பேசவைத்த இயக்குநர் கோபி நயினாருக்கு சல்யூட்..

அதுவும் க்ளைமேக்ஸில் மொத்தக் கூட்டத்திலிருந்தும் பிரிந்து, தலைவி தனியாக வெடித்துக் கதறும்போது… க்ளாஸ். இனியும் இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் என்ன செய்தீர்கள் என தலைவியை யாரும் கேள்வி கேட்க முடியாது.

சொந்த பந்தங்கள்

இதுவரை வில்லனாகப் பார்த்துவந்த ராமச்சந்திரன், இந்தப் படத்தில் பாசமான அப்பாவாக பிரமாதமாக நடித்திருக்கிறார். வில்லனாக மட்டுமே நடிக்காமல், இப்படியும் பல படங்களில் நடிங்க ப்ரதர்.

அவர் மனைவியாக நடித்திருக்கும் சுனு லட்சுமியின் நடிப்பும் அபாரம்.

‘காக்கா முட்டை’ சிறுவர்களான விக்னேஷ், ரமேஷ் இருவரில், இளையவரான ரமேஷுக்கு நடிக்க அதிக வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

குழிக்குள் விழுந்த அந்த குழந்தை தன்ஷிகாவின் நடிப்பு அவ்வளவு பிரமாதம். நிஜமாகவே 100 அடி ஆழத்தில் கிடப்பதை அப்படியே நமக்கு புரிய வைக்கிறாள். அவளுக்கு மூச்சுத் திணறும்போது நமக்கும் திணறுகிறது. அவள் உதடுகள் துடிக்கும் போது நமக்கும் துடிக்கிறது. ‘இருட்டா இருக்கும்மா… பயமா இருக்கு’ என்கிற அவளது ஈனஸ்வரக் குரல், காதுக்குள் புகுந்து கதற விடுகிறது நம்மை.

இயக்குநர் கோபி நயினார்

நம் நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்பதை இரண்டு மணி நேர திரைப்படத்தில் அருமையாக காட்டியிருக்கும் இயக்குநருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.குறிப்பாக, தன் கலெக்டர் பதவியை ராஜினாமா செய்கிற நேரத்தில் மேலதிரிகாரி கேட்கும் கேள்விகளுக்கு நயன்தாரா சொல்கிற பதில்களில் நெருப்பு நெருப்பு…தலைவி மட்டுமல்ல… படத்தில் வரும் இன்னபிற கேரக்டர்களின் மூலமாக இந்திய அரசியல்வாதிகளை நோக்கி தீப்பந்தங்களை வீசிக் கொண்டேயிருக்கிறார் கோபி நயினார்.

1. “மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்கணும். ஏதோ ஒரு சட்டத்தை உருவாக்கிட்டு அதுல ஜனங்களை திணிக்கக்கூடாது!”
2.“ஒரு அடிமை எப்படி இன்னொரு அடிமைக்கு அடிமையா இருக்க முடியும்?”
3. “இந்த மாதிரி அரசியல்வாதிங்க ஒழிஞ்சாதான் நாடு உருப்படும்” என்கிற டயலாக்கை நயன்தாரா சொல்லும்போது, ஆமோதித்து ஆர்ப்பரிக்கிறது தியேட்டர்.
4. “முதல் குழந்தை குழிக்குள் தவிக்கும் போது இந்த பதிலை சொன்னால் நியாயம். இது 361 வது குழந்தை. இன்னும் இதே பதிலைதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிற இன்னொரு டயலாக்குக்கு இந்திய அரசியல்வாதிகள் தூக்கு மாட்டிக் கொள்ள வேண்டும்.
5.நிலாவில் ஆம்ஸ்டராங் கால் வைச்சதை விட பெருமை, நீ ஆழ்துளை கிணறுக்குள் போய்விட்டு திரும்புவது…” என்று பேசியதோடு நில்லாமல், ராக்கெட் கிளம்புகிற அதே நேரத்தில் குழாய்க்குள்ளிருந்து குழந்தை மீட்கக் படுகிற காட்சியையும் சேர்த்து கம்போஸ் பண்ணிய அந்த யுக்திக்காகவும் புத்திக்காவும் கொண்டாடப்படுவார் கோபி.

பாசிட்டிவ் பாயிண்ட்ஸ்

-தலைவி…தலைவி…தலைவி
-ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு .ஒவ்வொருமுறையும் கேமரா, ஆழ்துளைக் கிணற்றின் இருட்டில் இறங்கும்போதும் நம்மையே கயிற்றைக் கட்டி இறக்குவதுபோல அடிவயிறு கவ்வுகிறது.
-ஜிப்ரானின் இசை. முக்கியமாக பின்னணி இசையால் நம்மை சம்பவ இடத்திற்கே கொண்டு போய் கலங்க விட்டிருக்கிறார் ஜிப்ரான். ஆவணப் படம் போல இல்லாமல் பின்னணி இசை படத்துக்கு உயிர் ஊட்டுகிறது
-படத்தின் கதைக்களம் மற்றும் வசனங்கள்

நெகடிவ் பாயிண்ட்ஸ்

– சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை

பார்க்கலாமா?

துளியும் கவர்ச்சி உடைகள் கிடையாது. காதலன் இல்லை, டூயட் கிடையாது. குத்துப் பாட்டு, அச்சு பிச்சு காமெடி கிடையாது. ஏழை மக்கள், பாட்டாளி மக்கள் பற்றிய படமென்றாலும் டாஸ்மாக் காட்சிகள் இல்லை. என பல இல்லைகள்.

மக்கள் திரை அரங்குக்குச் சென்று பார்த்தால் தான் இந்த மாதிரி படங்களைத் துணிந்து தயாரிக்க முடியும்.

தியேட்டர்களில் மட்டுமல்ல… இந்தியாவின் உச்சந் தலையான பாராளுமன்றத்திலேயே திரையிடப்பட வேண்டிய படம் அறம்! படத்தில் இடம் பெற்ற அத்தனை பேரும் நல்ல சினிமாவுக்கான வரம்!