எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்…

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்,
இப்படிக்கு கல்வி..

சமீபத்தில் ஊடகங்களில் ஒரு விளம்பரத்தை பார்க்க நேர்ந்தது. அது ஒரு தனியார் பல தொழில்நுட்பக் கல்லூரியை பிரபலப் படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட விளம்பரம். அதில் அக்கல்லூரியின் தரத்தைப் பற்றியோ, உட்கட்டமைப்பு வசதிகளைப் பற்றியோ, அங்கு அமைத்துத் தரப்படும் வேலை வாய்ப்புத் திட்டங்களையோ பற்றி விவரிக்கவில்லை. மாறாக அக்கல்லூரியில் படித்தவர்க்கு பெண் தர தயாராக இருப்பதாக ஒருவர் கூறுவதாய் சித்தரிக்கப்பட்டுள்ளது. என்ன கொடுமை!!!! எதை எப்படி பிரபலப்படுத்துவது என்றில்லாமல் போய்விட்டது.

கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு… இது பாரதியின் பாடல்….

இன்றோ கடைத்தெருவில் கூவிக்கூவி விற்கப்படும் பொருட்களைப் போல கல்வியும் ஆகிவிட்டதே என்றென்னும் போதே மனம் வேதனை கொள்கிறது. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வரை நிலைமை இப்படி இல்லையே. ஏன் இந்த மாற்றம்?

கொஞ்சம் யோசித்தால் நமக்கு உண்மை புலப்படும். கல்வியும், மருத்துவமும் மனிதனின் அடிப்படை தேவைகள் என்றாகிவிட்டது. இவை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது தான் இவை அனைத்திற்கும் காரணம்!!!

கல்வி தனியார் மயமாக்கப்பட்டும், தனியார் வசமிருந்த மதுபானக் கடைகளை அரசே ஏற்று நடத்தும் இந்த அவல நிலையை நம் மாநிலத்தைத் தவிர வேறு எங்கு காண முடியும்???