சுடச்சுட சமோசா !!!

Samosa Old lady

தலைப்பைப் பார்த்ததுமே உங்கள் நாவில் எச்சில் ஊரியதென்றால் நீங்கள் கட்டாயம் சமோசா பிரியர்தான். தேநீர் இடைவேளைகளிலும், நண்பர்களோடு வெளியில் சென்றாலும், மழைக்கால மாலை வேளையிலும் நம்மில் பெரும்பாலானோரின் முதல் சாய்ஸ் “சமோசாதான்”.

அதிலும் எத்தனை, எத்தனை வகைகள். மதுரை சுற்று வட்டாரங்களில் வெங்காய ஸ்டஃப்பிங் சமோசாக்கள் பிரபலம். சென்னையில் காய்கறிகள் ஸ்டஃப்பிங் செய்யப்பட்ட சமோசாவுடன் பச்சை சட்னியும் சாஸீம் பரிமாறப்படுகின்றன. பஞ்சாபில் சமோசாவுடன் சென்னாவும் சேர்த்துக் கொள்ளப் படுகிறது.

கோவையின் சுற்று வட்டாரத்தில் உருளைக்கிழங்கு ஸ்டஃப்பிங் சமோசாக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. எல்லாம் சரி இதென்ன நம்ம ஊர் உணவா என்றால் இல்லை என்பதே பதில்.

கடந்த எட்டு நூற்றாண்டுகளாகத்தான் தெற்காசிய சமையலில் சமோசா வெகு பிரபலம். இது மத்திய கிழக்கு நாடுகளை பூர்வீகமாகக் கொண்டது. 14 ம் நூற்றாண்டில் வியாபாரிகள் இதை இந்தியாவில் அறிமுகம் செய்தார்கள். முகலாய மன்னர்களின் உணவுப்பட்டியலில் சமோசா நீங்காத இடம் பிடித்திருந்ததாக வரலாற்றும் உண்டு.

இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட போது இதை நம் உணவுப்பழக்கத்தின் படி சைவமாக மாற்றிக் கொண்டோம். இன்றளவும் வட இந்தியாவின் சில பகுதிகளிலும், பாகிஸ்தானிலும் அசைவ சமோசாக்கள் விற்பனையில் உள்ளன. நம் ஊரில் பண்டிகை காலங்களில் இனிப்பு பண்டங்களின் விற்பனை எப்படி ஜோராக உள்ளதோ அது போல சோமாலியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் சமோசா பண்டிகை கால உணவு.

எது எப்படியோ, மருத்துவர்கள் சமோசாவில் அதிக கலோரிகள் இருப்பதாகவும், அதில் சேர்க்கப்படும் மைதா உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கும் என்றும் சொல்கிறார்கள். இதெல்லாம் பார்த்தால் முடியுமா??? சமோசா டா!!!!!!!