செல்வி ஜெ. ஜெயலலிதா என்னும் நான்….

jayalalitha

தமிழக அரசியலில் அதுவும் பெண்கள் பெரிதாக பங்கெடுத்துக் கொள்ளத் தயங்கும் காலகட்டத்திலே தனி ஒரு பெண்மணியாய் அரசியலில் கோலோச்சிய பெருமை ஜெயலலிதாவை மட்டுமே சேரும். எதிர்கட்சிகளுக்கு மட்டுமல்ல, தன்னை எதிர்த்த அனைவருக்கும் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் அவர்!!

“நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், அறிவுடன் கூடிய கர்வமுமே பெண்ணியம்” என்ற பாரதியின் வரிகள் இவருக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். இந்தியாவில் அதிமுக வை மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கிய பெருமை இவரையே சேரும். சட்ட சபையில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும்போது இந்த கேள்வியை கேட்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என கேட்கும் துணிச்சல் இவரைத் தவிர வேறு யாருக்கு வரும்.

ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்தே விலகி விடலாம் என்று எண்ணியவர்க்கு விதியோ வேறு சில திட்டங்களை வைத்திருந்தது. தமிழக முதல்வராக ஆறு முறை பதவியேற்று வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

ஒரு பெண்ணை பலவீனப்படுத்த வேண்டும் என்றால் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சிப்பதை பழக்கமாகக் கொண்டவர்கள் அரசியல்வாதிகள். அந்த வகையில் இவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் விமர்சனத்திற்கு உள்ளானது. விமர்சனங்களுக்கு பயப்படுபவர்கள் பொது வாழ்வில் வெற்றி பெறுவது இல்லை. இவை எப்போதுமே ஜெயலலிதாவின் போக்கை எந்த காலத்திலும் மாற்றியது இல்லை.

கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற கம்பீரத்துடன் கண்ணசைவில் கட்டளைகளை நிறைவேற்றி கட்சியை கட்டுக்கோப்பாய் வழிநடத்தியவர்.வலியச் சென்று யாரிடமும் நட்பு பாராட்டுவதோ, முகஸ்துதி செய்வதோ இவரிடம் துளியும் இல்லை.

வசிஷ்டரிடமிருந்து பிரம்மரிஷி பட்டம் பெற்றது போல இவர் கருணாநிதியால் ” நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்” என்று பாராட்டப் பட்டிருக்கிறார்.

நுனி நாக்கு ஆங்கிலம், தைரியம், எதையும் லாவகமாக கையாளும் பண்பு, இவற்றுடன் அரசியல் சாணக்கிய தனத்திலும் சிறந்து விளங்கினார் ஜெ. இவரின் ” மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற வரிகள் அரசியல் பொதுக்கூட்டங்கள் அனைத்திலும் தவறாமல் இடம்பெற்றிருந்தது.

இவர் ஆட்சி செய்த வரை தமிழகத்தில் மீத்தேன் எரிவாயு திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என எதுவும் தமிழகத்தில் ஆரம்பிக்கப் படவில்லை. இவரின் ஆட்சி காலத்தில் இவற்றையெல்லாம் தமிழகத்தில் திணித்து விட முடியாது என்பதையும் மத்திய அரசு அறிந்தே வைத்திருந்தது.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக நடுநிலையான ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பதே இவரின் கனவாக இருந்தது ஆனால் அதற்குள் காலன் முந்திக் கொண்டான். இவர் இருக்கும் வரை இவரின் அருமை நமக்குத் தெரியவில்லை. இப்போது நடக்கும் அரசியல் குழப்பங்களைப் பார்க்கையில் தான் புரிகிறது இவர் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா?

நாற்பது வருட அரசியல் இவரை பக்குவப்படுத்தியிருக்கிறது. பதம் பார்த்திருக்கிறது. ஆனால் பாதுகாத்திருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

செல்வி ஜெ. ஜெயலலிதா என்னும் நான் என்ற குரல் இனி என்று ஒலிக்கும்????

J-Jayalalithaa

தமிழ்நாட்டு அரசியலில் இப்படியொரு புரட்சித் தலைவி இருந்ததும் இல்லை. இனி ஓர் ” அம்மா ” கிடைப்பார் என்பதிலும் நம்பிக்கை இல்லை.

ஜெயலலிதா இந்த நூற்றாண்டின் சிறந்த ஆளுமையே என்பதில் சிறிதும் ஐயமில்லை.