ஜாதிகள் இல்லையடி பாப்பா !!!

Freeyavidu - ஜாதிகள் இல்லையடி பாப்பா

ஜாதியை ஒழித்திட இளைஞர்கள் கலப்புத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே தற்காலத்தில் பலரது கருத்தாக உள்ளது. ஜாதியை ஒழித்திட கலப்புத் திருமணம் மட்டுமே தீர்வாகாது. நீங்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டாலும் உங்கள் பிள்ளையை பள்ளியில் சேர்க்க நீங்கள் எப்படியும் ஜாதிச் சான்றிதழை பள்ளியில் சமர்பிக்கத்தான் வேண்டும்.

ஜாதியின் பெயரால் இழைக்கப் படும் அவலங்கள் களையப்பட வேண்டும் என்ற எண்ணம் மிகச் சரியானதுதான். இதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதற்கான சரியான வழிமுறைகளை நாம் கையாள்கிறோமா என்றால் இல்லை எனலாம்.

குழந்தையை பள்ளியில் சேர்க்கச் சென்றால் அப்ளிக்கேஷன் பார்மில் முக்கிய தகவல்களுடன் ஜாதியின் பெயரையும் குறிப்பிடச் சொல்கிறார்கள். கல்வி கற்கும் இடத்தில் ஜாதியின் அவசியம் என்ன? அதோடு விட்டார்களா.. இன்ஜினியரிங் கவுன்சிலிங், அரசு வேலை என அனைத்திற்கும் ஜாதி வாரியாக இட ஒதுக்கீடு. அதற்கேற்றார் போல் மதிப்பெண் வேறுபாடுகளும்..

உயர் வகுப்பில் பிறந்த அனைவரும் சகல வசதிகளும் படைத்தவர்கள் இல்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அனைத்து உரிமைகளும் மறுக்கப் படுவதும் இல்லை.

பிறகு எதற்கு இந்த பிரிவினை. இப்படி ஒரு குழந்தையின் பள்ளிப்பருவத்திலிருந்து கல்லூரிக் காலம் வரை அனைத்திலும் ஜாதியின் பெயரை நுழைத்துவிட்டு திருமணம் என்று சொல்லும் போது மட்டும் ஜாதிகள் இல்லை என்று அவனை நம்பச் சொன்னால் எப்படி?

திறமை இருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்படும் அவலம் அனுதினமும் நம் கண் முன்னே அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதை தடுக்க திறமையுள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். கல்வி, மருத்துவம் இதர பிற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் சமமாக கிடைக்கும் படி செய்ய வேண்டும்.

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே பாடினார் பாரதியார். ஆனால் சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் அதை நாம் செயல் படுத்தவில்லை என்பதுதான் கசப்பான உண்மை !!!


தேசிய கவி சுப்ரமணிய பாரதியார் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!

பிறப்பு: டிசம்பர் 11, 1882

பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)