பெருங்காயமா… இல்லை பெரும் காயமா..?

காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா என்பது முன்னோர் வாக்கு.

இதில் காயம் என்பது குறிப்பிடப்படுவது மனித உடல். மனித உடலில் ஏற்படும் சில நோய்களுக்கு பெருங்காயத்தை கொண்டு எப்படி தீர்வு காண்பது என்பதை பற்றி பார்ப்போம்.

இன்று நம் இளம் தலைமுறையினர் பெரும்பாலானோர் துரித உணவுகளுக்கு அடிமை பட்டே கிடக்கிறோம். விளைவு செரிமானம் சார்ந்த பிரச்சனைகளும், குடல் புண்களும் நம்மை எளிதில் அணுகி விடுகின்றன. செரிமானம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்து பெருங்காயமாகும்.

வெந்நீரில் சிறிது பெருங்காயத்தையும், உப்பையும் சேர்த்து பருக ஜீரண கோளாறுகளும், வாயுத் தொல்லைகளும் நீங்கும். பெருங்காயத்தை தினசரி உணவில் சேர்த்து வர உயர் இரத்த அழுத்தம் குறைவதுடன் நரம்புகளும் வலுவடையும். தீராத ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு பெருங்காயத்தை தீயில் காட்டி அதில் வரும் புகையை சுவாசிக்க மூச்சுத்திணறல் சரியாகும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க பெருங்காயத்தை பாகற்காயுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

அனைத்தும் சரி.. நல்ல தரமான பெருங்காயத்திற்கு எங்கே போவது? அதை நாம் சுலபமாக கடைகளில் இருந்து வாங்கி வந்து விடலாம் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமையே. சந்தேகம் இருந்தால் உங்கள் சமையலறையில் இருக்கும் பெருங்காய பாட்டிலின் பின்புறம் இருக்கும் மூலப் பொருட்களை பாருங்கள். அவற்றில் இருப்பது அறுபது சதவீதம் அரேபிய பிசினும் முப்பது சதவீதம் மைதாவுமே ஆகும்.. இவற்றை உண்பதால் நன்மைகள் எதுவும் கிடைக்காது. நல்ல பெருங்காயம் நாட்டு மருந்து கடைகளில் கட்டிகளாகக் கிடைக்கும். தண்ணீரில் கரைத்தால் பால் போல் கரையும்..

உணவே மருந்து.. நல்லதையே உண்போம்..