மறைக்கப்பட்ட உண்மைகள்…

chippiparai dog

தமிழரின் கலாச்சாரமும் பண்பாடும் உலகம் போற்றும் சிறப்புமிக்கது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழரின் பாரம்பரியம் மட்டும் அல்ல, அவர்களின் செல்லப்பிராணிகளுக்கும் வரலாற்றில் தனி இடம் உண்டு என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் நாம் காலப்போக்கில் அப்பொக்கிஷங்களை பாதுகாக்கத் தவறிவிட்டோம்.

நாம் இந்த பதிவில் அழிவின் விளிம்பில் இருக்கும் நம் நாட்டு நாய்களின் பெயர்களையும் அவற்றின் சிறப்புகளையும் அறிந்து கொள்வோம்.

சிப்பிப்பாறை

  • இவ்வகை நாய்கள் உரிமையாளருடன் நெருங்கி பழகும் குணம் கொண்டது.
  • பழங்காலத்தில் வேட்டைக்காகவும் வீட்டு காவலுக்காகவும் பயன்படுத்த பட்டது.
  • இந்த வகை நாய்கள் முயலை விட வேகமாக ஓடும் திறன் பெற்றவை.

கன்னி

  • இவை உரிமையாளருக்கு உண்மையானவை.
  • சுயமாக சிந்திக்கும் ஆற்றல் கொண்டவை. இவற்றின் கால்கள் வலுவானது.
  • மனிதர்களின் பழக்கங்களை கிரகித்து அதை அப்படியே திரும்பச் செய்யும் திறன் கொண்டது. எனவே சிறப்புப் பயிற்சிகள் தேவையில்லை.
  • பண்டைய காலத்தில் பெண் வீட்டார் சீர்வரிசைகளோடு சேர்த்து கன்னியையும் பரிசளித்ததாக வரலாறு உண்டு.

கோம்பை

இவனை மிஞ்சிய காவலாளியும் உண்டோ இந்த அவனியில்!!!!

இவை தேனி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவை. தனி ஒருவனாக ஒரு பண்ணையை காவல் காக்கும் ஆற்றல் பெற்றது. காட்டு எருமையை கூட எளிதில் வீழ்த்தக் கூடியது.

ராஜபாளையம்

  • இந்திய வேட்டை நாய் வகையை சேர்ந்தது. உயரமாகவும் மெலிந்தும் காணப்படும்.
  • உரிமையாளரைத் தவிர யாராலும் அவ்வளவு எளிதில் இவனை தொட்டு விட முடியாது.

அலங்கு

இவ்வகை திருச்சி மற்றும் தஞ்சையில் காணப்பட்டது. தஞ்சை பெரிய கோவிலின் உள்பிரகாரத்தில் ஒரு நாயின் ஓவியம் காணப்படுகிறது. இவற்றின் சிறப்பை அறிந்த சோழன் அதை ஓவியமாகச் செதுக்கி மேன்மை படுத்தியதாகவும் நம்பப்படுகிறது.

 

மீடியாக்கள் சொல்ல மறந்த கதை

நம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய PETA  அமைப்பு எவ்வளவு முயற்சி எடுத்ததோ, அதே அளவு முயற்சி நம் நாட்டு இன நாய்களின் பெருக்கத்தை தடுக்கவும் எடுக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு நாய் வளர்ப்பு பிரிவு சைதாப்பேட்டையில் இயங்கி வந்தது. இதன் நோக்கமே நம் இன நாய்களை இனவிருத்தி செய்து அழிந்திடாமல் பாதுகாப்பதாகும்.

PETA

PETA  அக்டோபர் 4, 2016 ம் ஆண்டு தமிழ்நாடு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் நடத்தப்படும் நாய் வளர்ப்பு காப்பகத்தில் நாய்கள் துன்புறுத்தப்படுவதாகவும், எனவே அதை மூடவும் வலியுறுத்தி வழக்கு ஒன்றை தொடர்ந்தது.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் AWBI (Animal Welfare Board of India) எனப்படும் விலங்குகள் நல வாரியம் ஆய்வு செய்து, பரிந்துரைத்தால் நாய்கள் வளர்ப்பு காப்பகத்தை மூட அரசுக்கு அறிவுறுத்தியது. AWBI ன் ஆய்வறிக்கையின் படி டிசம்பர் 16, 2016 ல் உயர்நீதிமன்றம்  இந்த நாய் வளர்ப்பு காப்பகத்தை மூட உத்தரவு பிறப்பித்தது..

இவையெல்லாம் நம் மீடியாக்கள் நம்மிடம் சொல்ல மறந்த கதை… PETA விற்கு நம் நாய்களின் மேல் எவ்வளவு அன்பு என யாரும் எண்ணி விட வேண்டாம்.. அனைத்தும் வியாபார உள் நோக்கத்தோடு திட்டமிட்டு செய்யப்பட்டவயே!! இன்று நம்மில் பெரும்பாலானோர் அந்நிய நாட்டு நாயினங்களையே வீட்டில் வளர்க்கிறோம். அவற்றிற்கு நம் சீதோஷ்ண நிலையும், உணவுகளும் உகந்ததல்ல. எனவே நீங்கள் அதற்கென பிரத்யேக உணவுகளையும், மருந்துகளையும் வாங்க வேண்டி இருக்கும்.

நம் நாட்டு நாயினங்கள் நம் கால நிலைக்கு ஏற்றவை. இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு திறன் கொண்டவை. இவற்றை பராமரிப்பது மிகவும் எளிது..இப்படி யதார்த்தங்களை  அறிந்து கொண்டு நாம் நம் நாட்டு இன நாய்களை வளர்க்கத் தொடங்கினால் வியாபார நிறுவனங்கள் தங்களது பொருட்களை இங்கே விற்க முடியாது அல்லவா. சுதாரித்துக் கொண்ட வியாபார நிறுவனங்கள் நம் நாட்டு  நாய்களின் பெருக்கத்தை தடுக்கவும், முற்றிலுமாக அழிக்கவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன. நாம் இனியும் தாமதிக்காமல் அந்நிய மோகத்தை விடுத்து மீட்டெடுப்போம் நம் செல்ல(வ) ங்களை….