யார் அந்த நான்கு பேர் ???

FreeyaVidu - 4 People

தொழில் தொடங்க நம்பகமான நாடுகளின் பட்டியலில் முன்னேற்றம், பொருளாதாரத்தில் வேகமான வளர்ச்சி என நம் நாடு முன்னேறி கொண்டிருந்தாலும் ஒரு சாமானியனின் வாழ்க்கையில் முக்கியமான முடிவுகளின் பின்னணியில் இருப்பதென்னவோ அந்த நால்வர் தான்…

யார் அந்த நான்கு பேர் ???

கல்லூரியில் படிக்கும் வயதுள்ள பெண் ஒருத்தி தன் அம்மாவின் பிறந்த நாளுக்காக அழகான ஜிமிக்கி கம்மல் ஒன்றை வாங்கி பரிசளித்தாள்.. அதைப் பெற்றுக் கொண்ட அம்மாவின் முகத்திலோ லேசான வருத்தம்.. மகளிடம் சொன்னார், திருமண வயதில் பெண்ணை வைத்துக் கொண்டு நான் இதை அணிந்து கொண்டால் நான்கு பேர் நான்கு விதமாக பேசுவார்களே என்று..இது ஒரு வகை…

பெற்றோர் தன் மகனின் திருமணத்திற்கு பெண் பார்க்கத் தொடங்கும் போது மகனோ தன்னுடன் கல்லூரியில் படித்த பெண்ணை விரும்புவதாகவும் அவளையே திருமணம் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தான். அவனின் பெற்றோருக்கோ அப்பெண்ணின் சாதியோ, அந்தஸ்தோ ஒரு பொருட்டல்ல. மாறாக ஊரிலுள்ளவர்கள் தன் குடும்பத்தை பற்றி என்ன நினைப்பார்களோ என்ற கவலை. இது ஒரு புறம் இருக்க…

ஊரில் உள்ள பெரும் செல்வந்தர் ஒருவர் தன் மகனை பல லட்சங்கள் செலவழித்து பிரபலமான பொறியியல் கல்லூரியில் சேர்த்தார். மகனுக்கோ பொறியியலில் துளியும் ஆர்வமில்லை. அவனுடைய விருப்பமோ பொருளாதாரம் பயில்வதாகும். தந்தையிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தான். தந்தையோ உன்னை சாதாரண அப்பாடப்பிரிவில் சேர்த்தால் ஊரார் தன்னைப் பற்றி ஏளனப்புன்னகை செய்வார்கள் என்று மகனின் ஆசையை மறுத்து விட்டார்…

மேற்கூறிய நிகழ்வுகள் நம் அன்றாட வாழ்வில் பிறர் கூறக் கேட்பவையே… உண்மையில் யார் அந்த நான்கு பேர்? அவர்களுக்கும் நமக்கும் என்ன பந்தம்.??

பெரிதாக எதுவுமே இல்லை…

நாம்தான் நம்மை பற்றி எப்போதும் பிறர் எண்ணிக்கொண்டிருப்பதாய் தவறாக நினைக்கிறோம்.. வாழ்க்கை இயந்திரத்தனமாக மாறி விட்ட இந்த காலகட்டத்தில் பெரும்பாலும் யாருக்கும் பிறரைப் பற்றி நினைக்கவோ, புரளி பேசவோ நேரமில்லை என்பதே நிதர்சனமான உண்மை…

இனிமேலாவது நாலு பேர் நாலு விதமாக பேசுவார்களே என்ற எண்ணத்தை  விட்டொழித்து உங்களின் திருப்திக்காகவும், குடும்பத்தாரின் மகிழ்ச்சிக்காகவும் வாழப் பழகுங்கள்.. வாழ்க்கையை இனிமையானதாக மாற்றுங்கள்.