“வயது வந்தவர்களுக்கு”

Writer Sujatha quotes

எழுத்தாளர் சுஜாதாவின் இந்த அறிவுரைகள் 16 லிருந்து 18 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானதே. அவரின் பொன் மொழிகள் இதோ…

1. கடவுள், இயற்கை, உழைப்பு இப்படி ஏதாவது ஒன்றின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். அதுவும் கேள்வி கேட்காத நம்பிக்கை. ஏனென்றால் நவீன விஞ்ஞானம் எல்லாவற்றிலும் கேள்வி கேட்டு பதில் தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது.

2. அம்மா, அப்பா இருவரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒரு மாறுதலுக்கு அவர்கள் சொல்வதை செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மேட்னி ஷோ போகாதீர்கள். கிளாஸ் கட் பண்ண வேண்டி வரும், தலைவலி வரும், வீட்டிற்கு போனதும் பொய் சொல்ல வேண்டி இருக்கும். அதற்கு மிகுந்த ஞாபக சக்தி வேண்டும். “இளமை” – ஒளிக்கீற்றைப் போல மிகவும் குறைந்த காலம். அதை க்யூ வரிசைகளிலும், குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. குறைந்தது ஒரு நாளைக்கு நான்கு பக்கங்களாவது பொது விஷயங்களைப் படியுங்கள். அதுவும் யோக்கியமான செய்தித்தாள், பிறரை பற்றி கவலைப்படுகிற பத்திரிக்கைகள் அல்லது ஏதாவதொரு புத்தகம்.

5. அடுத்த முறை அப்பாவிடம் சுடிதாரோ, சட்டையோ கேட்கும் முன் உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனசாட்சி உறுத்தாமல் ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள்.

6. இதை படிக்கும் நீங்கள் இந்திய ஜனத்தொகையில் மேல் தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவ‌ர். அன்றாட சோற்றுக்காக அலையும் மக்களை தினம் ஒருமுறை படுக்கப் போகும் முன் எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று காதல் வேண்டாம். காதல் தேவையில்லாத இடங்களில் உன்னை காத்திருக்க வைக்கும். இந்த வயதில் நாசமாய் போன படிப்பு மட்டும்தான் உங்களுக்கு முக்கியம்.

பின் குறிப்பு : சைட் அடிப்பதும், உபத்திரவம் இல்லாத கவிதை எழுதுவதும் காதலில் சேராது.

8. ஒரு நாளைக்கு எட்டு முறையாவது ஒரு மைதானத்தைச் சுற்றி ஓடுங்கள். நெற்றியில் வியர்வை அரும்பும். தேகப்பயிற்சியால் கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். நன்கு தூக்கம் வரும். கடிகாரத்திற்கு சாவி கொடுப்பதோ, சீட்டாடுவதோ தேகப்பயிற்சி ஆகாது.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வர வேண்டும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிஷம். ராத்திரி பிறர் வீட்டில் தங்கவே தங்காதீர்கள். அங்கிருந்து ஆரம்பிக்கும் வினை.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன் யாருடனாவது பேசுங்கள். கல்லூரியில் நடந்தவை அல்லது மொக்கையான ஜோக்கை கூட சொல்லலாம். சப்ஜெக்ட் முக்கியமல்ல, பேசுவதுதான் முக்கியம்.